Thursday, May 31, 2018

ரண நொடிகள்

ரணங்களின் மீது
கடந்து போகிறது
ஒவ்வொரு நொடிகளும்.....

எண்ணங்கள் பறந்து செல்லும் திறந்த வெளியின்
எல்லா திசைகளிலும் பாதச்சுவடுகள்.....

காலடியில்
கைநழுவிப் போகிறது கன்னங்களில் வழிந்த
கண்ணீர் துளிகள்....

காத்திருப்புகளில்
பூத்துப்போகிறது கண்மலர்கள்
ஒளி மறைந்து....

கனவுகளில் படர்ந்த இருளில்
உன் நினைவுகள் மட்டும்
தூவி செல்கிறது
வெளிச்சப்பூக்களை.....

மேகதிரள்களில் எட்டிப்பார்க்கும் பிறைநிலா மட்டும்
விதைத்து செல்கிறது
நம்பிக்கை செடியொன்று.....

செல்வம்

Wednesday, May 30, 2018

தூண்டில் பூக்கள்


வெளிச்சத்தைத் தின்று கொழுத்த இருட்டு....

சின்ன சின்னதாய் மிச்சமாகிப்போன எச்சங்களாய் தூரத்து விண்மீன்கள்.....

இருட்டுக்குப் பழகிப்போன விழிகளில் இருட்டே வெளிச்சமாய்....

நா வறண்ட தண்ணீர் சமுத்திரம்...

விடியல் என்ற நம்பிக்கை வரையும் துடுப்புகள்.....

அலைகள் கொண்டு செல்லும் அவசரச்செய்தி கரைதொட்டும் காற்றின் மொழியறியா மரமனிதர்கள்.....

விதியின் தூண்டிலில் சிக்கியிருக்கிறேன் மீனாய்.....

நரம்பின் கருணைக்குக் காத்திருக்கிறேன்

கரை வரும்.....

செல்வம்

Tuesday, May 29, 2018

கிரீடச் சிறகுகள்

நான்
உதிர்ந்த சிறகுதான்....

இன்னும் என்னுள்
என்தாய் வீட்டின் வெப்பம் உணர்கிறேன்....

நான் மடிந்தோ முடிந்தோ போனவளல்ல..

நான்
புது வீடு தேடிவந்த
புதுமைப்பெண்

என்னை
ஆடை செய்தால்
உஷ்ணமாவேன்...

என்னை
விசிறியாக்கினால்
தென்றலாவேன்....

நான்
தூசிகளைத் தூரவிலக்கும் மென்மையாவேன்

உங்களுக்கெல்லாம் தெரியாது....

நான் தலைக்கும் கிரீடமாவேன்.....
ஆட்சி செய்வேன்...

நான் மரணத்தை வென்றவள்

செல்வம்

Monday, May 28, 2018

மருத்துவ முத்தம்


நீ
அள்ளிச் சொருகிய
கூந்தலிலும்
ஆடையிலும் சிக்கித் தவிக்குதடி
என் மனசு

என் கண்களின்
கேள்விகளில் மறைந்திருக்கிறது உன் அழகின்  சுவாரஸ்யங்கள்

உன் உஷ்ணம் உணர்ந்து மலர்ந்த தாமரைகள் மலங்க மலங்க விழிக்குதடி....
இன்னொரு முறை எப்படி பூக்கும்....சூரியன் வந்தால்....

முத்து மலையே உனக்கெதற்கடி
முத்து மாலை...

கொஞ்சம் திரும்பு....

காத்திருக்கிறது முத்த மாலை.....

செல்வம்

Sunday, May 27, 2018

கருணைக்கடல்

வெளிச்சத்தை தின்று கொழுத்த இருட்டு....

சின்ன சின்னதாய் மிச்சமாகிப்போன எச்சங்களாய் தூரத்து விண்மீன்கள்.....

இருட்டுக்கு பழகிப்போன விழிகளில் இருட்டே வெளிச்சமாய்....

நா வறண்ட தண்ணீர் சமுத்திரம்...

விடியல் என்ற நம்பிக்கை வரையும் துடுப்புகள்.....

அலைகள் கொண்டு செல்லும் அவசரச்செய்தி கரைதொட்டும் காற்றின் மொழியறியா மரமனிதர்கள்.....

விதியின் தூண்டிலில் சிக்கியிருக்கிறேன் மீனாய்.....

நரம்பின் கருணைக்கு காத்திருக்கிறேன்

கரை வரும்.....

செல்வம்

Saturday, May 26, 2018

விடாது கருப்பு

என்னையும்
மீறி தூரமாகிப்போகிறது
என் நிழல்.....

காலடியில்
கண்ணுக்குத் தெரியும்
நிழல்
கையெட்டா
தூரத்திலிருந்து
கண் சிமிட்டுகிறது....

என்னை
விட்டுப் பிரிந்து
செல்லும் முயற்சிகளில்
தோற்றுப் போகும்
என் நிழல்
மீண்டும்  காலடியிலேயே
தஞ்சம் கேட்கிறது.....

என்றாவதொரு நாள்
என் நிழல்
என்னை வென்றிடலாம்
எனக்குத் தெரியாமல்....

கூடவே
இருப்பான்
என்று நானும்
வேறு வழியின்றி
அவனும்
நம்பிக்கையுடனே பயணிக்கிறோம் இலக்கில்லாமல்.....

செல்வம்

Friday, May 25, 2018

ஓவியம்


தூரிகை பேசும்
மௌனமொழி...

மூங்கிலொன்று
காதுக்குள் இசைத்துச்செல்கிறது
புல்லாங்குழல்....

நீலக்கடலலையில் நிலவுமகள்
மனசுக்குள் பூக்கும் பனித்துளி

கண்களுக்குள் தோரணம் பின்னும் பட்டாம்பூச்சி....

காய்ந்த காகிதங்களில்
வர்ண மழைச்சாரல்

சோறூட்டும் தாய்மைக்கும்
வாய் திறக்கும் குழந்தைக்கும்
சேர்ந்திசைக்கும் தாலாட்டு...

ஓவியம்

செல்வம்

Thursday, May 24, 2018

வருவான் கடவுள்

எல்லா உயரங்களும்
தொட்டுவிடும் தூரமே...
எல்லா உயிர்களும்
நம்பிக்கையின் பிறப்பிடமே...

விடிந்து வரும் சூரியனும் மாலையில் ....
முடிந்து போகிறது ...
நாளை வரலாம் என்ற நம்பிக்கை விதைத்து...

குளிர் நிலவு
வளர்வதும் தேய்வதும் 
ஒரு பௌர்ணமியின் இலக்கை தேடியே...

வண்ண மலர்கள்
மலர்வதும் மணம் வீசுவதும்
பொன்வண்டுகளின்
ஸ்பரிசம்
தேடியே....

கட்டளைகளுக்கு பழகிப்போன பாழும் மனசு மட்டும் இன்னும் காத்திருக்கிறது...

கடவுள் வருவான் கை கொடுப்பானென்று...

செல்வம்

Wednesday, May 23, 2018

இரவு பூபாளம்

இன்னும்
வானம் கருக்கவில்லை...

தூரத்தில் மறையும் சூரியனின் வெப்பக்காற்றை ஆற்றியிருந்தது கடலலைகள்....

முக ரேகைகளில்
களைப்பு கூடுகட்டியிருந்தது...

உழைப்பின் உப்புக்கோடுகளாய்
வியர்வை விட்டுச்சென்ற பிசுபிசுப்பு.....

உடம்புக்கு முன் வீடு திரும்பும் பறவை மனசு....

சின்னக்குளியலில் பட்டென்று விலகும் அசதி....

கொஞ்சம் உணவு
கொஞ்சம் செய்தி....

மீண்டும் காத்திருக்கிறேன்...

நிலா வருவாள்....

செல்வம்

Tuesday, May 22, 2018

நம்பிக்கை தளிர்கள்



தூரங்களில் தெரிகிறது முடிவறியா பயணங்களின் இறுதிக்கோடு......

தொட்டுவிட எத்தனிக்கும் நிமிடத்துளிகளில் கானல் நீரின் நிழல் நடனங்கள்....

கடந்து போன மணல் மேடுகளில் நீண்டு வளைந்த பாதச்சுவடுகளின் காலடித்தடங்கள்......

காட்டிக்கொடுக்கும் எட்டப்பனாய் காய்ந்த சருகுகளின் சலனங்கள்.....

தொலைவானத்தில் வானவில்
எங்கோ பெய்த மழையின் முகவரியாய்.....

திசைகளெங்கும் என் பிம்பங்கள் நான் மட்டும் தொலைந்து போனேன் என்னை தேடி......

விதைமுளையின் தளிர்களில் துளிர்க்கிறது புதிய வாழ்க்கையின் ......துவக்கம்

செல்வம்

Monday, May 21, 2018

மனிதனும் மலர்வனமும்



பச்சையிலைகளின் பசுமையில் மரங்கள் ஆட்சி செய்யும் மண்தேசம்....

மலர் கிரீடங்களில் தேன் சுரக்கும் பூஞ்சோலை....

முதிர்ந்து உதிர்ந்த சருகுகளும் சலசலக்கும் மண்வீரியம்....

உயிர் சுவாசங்களைப் புதுப்பிக்கும் காற்றாலை...

நிழல்கள் இளைப்பாறும் நிஜங்களின் மஞ்சம்...

மலையரசியின் சிகரம் உரசும் பனித்துளிகளில் ஈரமெடுத்து ஓடிவரும் அருவிமகள் பருவம் தொட்டு நதிப்பெண்ணாகும் பச்சைகுடில்....

மழைமகளின் தாய்வீடு...

பறவைகளின் சரணாலயம்....

தொட்டிலாய் கட்டிலாய் ஊஞ்சலாய் மனித சுகங்களின் தாய்மடியாய்....

இந்த அழகிய கூடாரத்தில் நுழைந்த ஒட்டகமாய் மனிதன்...

செல்வம்

Sunday, May 20, 2018

விடியல் தேடி.....


நிலவு தூவிய பனித்துளிகளில்

நீராடி மலர்ந்த
பூக்களின் வாசங்களில் புன்னகைக்கிறது
புதிய பூமியொன்று....

நடந்து போன பாதச்சுவடுகளின் ஒற்றையடிப் பாதைகளெங்கும் படுத்துறங்கும் சரித்திரங்களின் நிழலோவியங்கள்....

திசைகளெல்லாம்...
காற்று சுமந்து வரும்
வியர்வைகளின் ஈரத்துளிகள்.....

மரக்கிளைகள் உதிர்த்த
சருகுகளாய்
வைகறை கொண்டாடும்
உயிர்பறவைகளின் சங்கீதம்.....

தூக்கம் கலைந்த
வயல்வெளிகளின்
உல்லாச தலையசைப்பில்
கூந்தல் உலர்த்தும் நெற்கதிர்கள்.....

உறக்க ஓய்வு முடித்து
உழைப்பின் உயிர்மூச்சு சுவாசிக்கலாம்....

மண்வெட்டி மட்டுமல்ல
மயிலிறகும் ஆயுதம்தான்...

விதைப்பது நம்பிக்கையானால்....

செல்வம்

Saturday, May 19, 2018

விவசாயம்

இரவு விசிறிச் சென்ற
நாற்றங்கால் விதைகளாய்
பனித்துளிகள்
புல் வெளியெங்கும்

ஒளி விரல் கீற்றுகளால்
பூமியில் அழுத்திச் செல்லும்
ஒற்றை சூரியன்..

நாற்றுகளைப் பிடுங்கி
நட்சத்திரங்களாய்
விண்வயலில் பயிரிட
மாலை வருவாள்
என் நிலா..

அறுவடைக்காக
காத்திருக்கிறேன்
நான்..

செல்வம்

Friday, May 18, 2018

நிச்சயமான நிஜம்


நள்ளிரவில்தான் வாங்கினோம்.....
நமக்கு மட்டும்தானா விடியவில்லை.......?

நமது பகல்களை
உழைப்பதிலும்
உருவாக்குவதிலும் கழித்து
இரவில் சுதந்திரம் பேசியிருக்கிறோம்....

நமது பயணக் கடிவாளங்களைத் தலைவர்களிடம் கொடுத்து சொகுசு பயணத்திற்கு ஆசைப்பட்டிருக்கிறோம்.....

நமது இலக்குகளின் திசை நிர்ணயங்களை ஏதோ ஓர் ஆட்காட்டி விரலசைவில் அடகு வைத்திருக்கிறோம்....

சின்ன சின்ன சில்லறை கையேந்தல்களில் நமது
உரிமைகளின் உரிமைகளைச் சன்னமாய் தாரைவார்த்திருக்கிறோம்....

தவமிருந்து
பெற வேண்டிய வரங்களைப்
பூசாரியின் மந்திரங்களில்
பெற முனைந்திருக்கிறோம்.....

வைகறை புலருமுன்னே நெற்றி விளக்கு கட்டி பால் கறந்த நமக்கு.....

பொழுதுக்கும் குடிக்கத்தான் முடிந்தது.....

வந்தவனெல்லாம் வாழ்கிறான்....

முந்தி வந்த நாம் இன்னும்
பிந்தி நின்று வயிறெரிகிறோம்.....

அடையாளம் தொலையும் முன்
அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவேண்டும்....

நாம் அடிமையில்லை...
ஆண்ட பரம்பரை....

புதிய பூமியில் பூக்கட்டும்
ஒரு புதிய விடியல்
நம்பிக்கை மலர்களின்
வாசம் சுமந்து......

செல்வம்