Friday, May 18, 2018
நிச்சயமான நிஜம்
நள்ளிரவில்தான் வாங்கினோம்.....
நமக்கு மட்டும்தானா விடியவில்லை.......?
நமது பகல்களை
உழைப்பதிலும்
உருவாக்குவதிலும் கழித்து
இரவில் சுதந்திரம் பேசியிருக்கிறோம்....
நமது பயணக் கடிவாளங்களைத் தலைவர்களிடம் கொடுத்து சொகுசு பயணத்திற்கு ஆசைப்பட்டிருக்கிறோம்.....
நமது இலக்குகளின் திசை நிர்ணயங்களை ஏதோ ஓர் ஆட்காட்டி விரலசைவில் அடகு வைத்திருக்கிறோம்....
சின்ன சின்ன சில்லறை கையேந்தல்களில் நமது
உரிமைகளின் உரிமைகளைச் சன்னமாய் தாரைவார்த்திருக்கிறோம்....
தவமிருந்து
பெற வேண்டிய வரங்களைப்
பூசாரியின் மந்திரங்களில்
பெற முனைந்திருக்கிறோம்.....
வைகறை புலருமுன்னே நெற்றி விளக்கு கட்டி பால் கறந்த நமக்கு.....
பொழுதுக்கும் குடிக்கத்தான் முடிந்தது.....
வந்தவனெல்லாம் வாழ்கிறான்....
முந்தி வந்த நாம் இன்னும்
பிந்தி நின்று வயிறெரிகிறோம்.....
அடையாளம் தொலையும் முன்
அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவேண்டும்....
நாம் அடிமையில்லை...
ஆண்ட பரம்பரை....
புதிய பூமியில் பூக்கட்டும்
ஒரு புதிய விடியல்
நம்பிக்கை மலர்களின்
வாசம் சுமந்து......
செல்வம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment